27/1/13

வக்கிர கணவன்... வதைப்பட்ட மனைவி

48 வயது நபருக்குத் திருமணம் செய்து​கொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் இரண்டே மாதங்​களில் கணவன் மீது ஏகப்பட்ட புகார்​களோடு காவல் நிலையம் சென்று இருப்பது காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிரவைக்கும் விஷயங்களைக் கொண்ட அந்தப் புகாரில், 'ஏழு பெண்களைத் திருமணம் செய்த என் கணவன், என்னை ஏமாற்றி எட்டாவதாகத் திருமணம் செய்திருக்​கிறார்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருப்​பதால், இந்த விவகாரம் தீயாகக் தகிக்கிறது. காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்தவர் தான்தோன்.பாஸ்கரன். பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற இவருடைய குடும்பத்தில் பலர் பிரான்ஸில் தொழில் செய்கிறார்கள். பாஸ்கரன் மட்டும் இங்கேயே தங்கி ரியல் எஸ்டேட் மற்றும் ஃபைனான்ஸ் தொழில் செய்கிறார். பிரான்ஸில் இருக்கும் பலருக்கும் அவர்களின் பணத்தை இங்கு முதலீடு செய்ய உதவுவார். அத னால், வசதிக்குக் குறைவு இல்லை. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, இவருக்குத் திருமணம் ஆகி மனைவியாக வருபவர்கள் அனைவரும் விவாகரத்து வாங்கிக் கொண்டு ஓடி விடுகிறார்கள். லேட்டஸ்ட்டாக, கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் - வசந்தி தம்பதியின் மூத்த மகள் லெட்சுமியைத் திருமணம் செய்தார். அவர்தான் இப்போது அடுக்கடுக்கடுக்கான குற்றச்​சாட்டுக்​களோடு காவல் நிலையத்துக்கு சென்று இருக்கிறார். பெருந்தோட்டத்தில் இருந்த லெட்சுமியைச் சந்தித்தோம். ''நான் 10-வது வரை படிச்சு இருக்கேன். எங்க வீட்டில் என் னையும் சேர்த்து மொத்தம் நான்கு பெண் பிள்ளைகள். அதில் நான்தான் மூத்தவள். 'முதல் மனைவி புற்றுநோயால் இறந்​துட்டாங்க... மாப்பிள்ளை உங்க குடும்பத்துக்கும் உதவியா இருப்பார்’னு அவரைப்பத்தி புரோக்கர் சொல்​லவும், குடும்பத்து நிலையை மனசுல வெச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. கல்யாணம் ஆகி பத்து நாள்கூட நான் நிம்மதியா இல்லைங்க. ஒவ்​வொரு நாளும் எனக்கு நரக வேதனைதான். ராத்திரி பகல்னு பார்க்காம எப்ப தோணுதோ, அப்ப எல்லாம் உடலுறவுக்கு கூப்பிடுவார். வலி தாங்க முடியாமக் கத்தினாலும் விடமாட்டார். சில நாட்களில் என்னையும் பிராந்தி குடிக்கச் சொல்லி வற்புறுத்துவார். மறுத்தால் கடுமையா அடிச்சு வாயில் வலுக்கட்டாயமா ஊத்தி ​விடுவார். உடம்பில் அந்தரங்கமான இடங்களில் சிகரெட்டால் சூடு வச்சு அலறுவதைப் பார்த்து ரசிப்பார். இப்படி அவர் தனிமையில் என்கிட்ட செய்யும் கொடுமைகளைக்கூட பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கிட்டேன். ஆனா, தன்னோட நண்பர்களைக் கூட்டிட்டு ​வந்து அவர்களோடு சேர்ந்து குடிச்ச பிறகு, அவங்களுக்கு முன்னாடி நடனம் ஆடச் சொல்வார். மறுத்​தால், அடிச்சு உதைச்சு உடைகளைக் கிழிச்சு நிர்வாணமாக நடனம் ஆடச் சொல்வார். அடியாலும் அவர் வலுக்​கட்டாயமாக ஊற்றிய மதுவாலும், எப்படியோ ஆடி அவர்களிடம் இருந்து தப்பிப்பேன். நண்பர்​கள் போன பிறகு அவருக்கு ஒரு வெறி வந்துவிடும். அதற்குப் பிறகு விடியும் வரை என்னை பாடாய்ப்படுத்துவார். கடந்த 20-ம் தேதி, வீட்டில் எண்ணெய் சட்டி வெச்சு மீன் பொரிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ வீட்டுக்கு வந்த​வர், 'உடனே வா’னு உடலுறவுக்கு அழைச்சார். 'இதோ, மீனைப் பொரிச்சுட்டு வர்றேன்’னு சொன்னேன். அவ்வளவு​தான்... எண்ணெய்யைத் தூக்கி என் மேல வீசினார். சட்டுனு விலகிட்டதால, முகத்திலும் உடலிலும் சில இடங்களில் மட்டும் எண்ணெய் பட்டதோடு தப்பிச்​சேன். வெளியே போனவர் களிம்பு வாங்கிக்கிட்டு வந்து கொடுத்துட்டு, கதவை வெளிப்பக்கம் பூட்டிட்டுப் போயிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகுதான், அவர் ஏற்கெனவே ஏழு பெண்களைத் திருமணம் செஞ்சு இருக்கிறார்னும் அவங்க எல்லாரும் இவரோட டார்ச்சர் தாங்க முடியாம பிரிஞ்சு​போயிட்டாங்கன்னும் சொன்னாங்க. அதைப்பத்தி அவர்கிட்ட கேட்டப்ப, என்னை அடிச்சு உதைச்சார். கை வளையல்கள் உடைஞ்சு காயம் ஏற்பட்டது. அவர் குளிக்கப் போகும்போது தப்பிச்சு என் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். அம்மா, அப்பாகிட்ட நடந்த கொடுமை​களை எல்லாம் சொல்லி, அவங்களோட வந்து காரைக்கால் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தேன்'' என்றார் அழுகையோடு. லெட்சுமி சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பாஸ்கரனின் தம்பி சண்முகத்திடம் பேசினோம். ''அனைத்தும் முழுக்க முழுக்கப் பொய்யான குற்றச்​சாட்டுகள். அவருக்கு இதற்கு முன்னர் மூன்று திருமணங்​கள் நடந்து இருக்கின்றன. மூன்றிலும் சுய விருப்பத்தோடு மனைவிகள் விவாகரத்து பெற்றனர். அதை விவரமாகச் சொல்லித்தான் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்தார். நன்றாக இருந்த பெண் திடீரென்று இப்படிப்பட்ட குற்றச்சாட்டை சொல்லி இருக்கிறார். இதன் பின்னணியில் அண்ணனின் தொழில் எதிரிகள் இருப்பதாகத் தெரிகிறது. அண்ணன் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டி இருக்கும் லெட்சுமி மீதும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்'' என்றார். லெட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் தான்தோன் ​பாஸ்கரனை அழைத்து விசாரித்த காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. லலிதா அவரை கைது செய்தார். ''ஏமாற்றித் திருமணம் செய்தது, வன்கொடுமை செய்தது, சித்ரவதை செய்தது ஆகிய குற்றச்சாட்டுக்களில் உண்மை இருப்பதால் கைது செய்தோம். லெட்சுமி சொல்லி இருக்கும் மற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து இப்போதுதான் விசாரணையைத் தொடங்கி இருக்கிறோம்'' என்றார். விசாரணையை விரைவில் முடித்து, உண்மைகளை போலீஸார் வெளிக்கொண்டு வரட்டும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக