26/1/13

இருப்புத் தொகையை திருப்பிக் கொடுத்தது சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கிகள் 1998ம் ஆண்டில் உருவாக்கிய பெருந்துயர மீட்பு நிதியான 1.3 பில்லியன் டொலரை, அத்துயர நிகழ்வால் பாதிக்கப்பட்டோருக்குத் திரும்பிக் கொடுத்துவிட்டதாக நீதிபதி எட்வர்ட் கோர்மன் தெரிவித்தார். இந்த நிதி தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டதால் மொத்தமாக அந்த நிதியை அனைவருக்கும் திருப்பித்தந்துவிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தொகையான 1.25 பில்லியன் டொலருடன் வட்டியும் சேர்த்து 1.3 பில்லியன் டொலர் திருப்பியளிக்கப்பட்டது. "1998ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த நிதியை 2001 முதல் வங்கிகள் திருப்பித்தரத் தொடங்கின. இப்போது தான் இந்த நெடும்பணி நிறைவடைந்தது" என்று கோர்மன் கூறினார். இதற்கான மீட்பாணையம் அனைத்துப் பணமும் திருப்பியளிக்கப்பட்டதால் அலுவலகமே 2012ம் ஆண்டில் மூடப்பட்டுவிட்டதாக அறிவித்துவிட்டது. இத்தகவலை கோர்மன் சுவிஸ் ஜேர்மனி மொழியில் வெளிவரும் பத்திரிகைக்கு பேட்டியளித்த போது தெரிவித்தார். வங்கி ஆவணங்கள் இரண்டாம் உலகப் போரின்போது அழிந்து போனதால் பலருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்றார் கோர்மன். ஒருவரிடம் ஒரு வங்கி ஆவணம் கூடக் கிடையாது. பத்திரிகைச் செய்தி ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு அவருக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சுவிஸ் வங்கிகள் தேவையின்றி பெருந்துயரத்தில் பிழைத்து மீண்டவர்களின் பணத்தை வைத்திருப்பதாகவும் அவர்களின் குடும்பத்தினரிடம் அந்தப் பணத்தைத் திருப்பித்தர வேண்டும் என்றும் அமெரிக்காவில் சுவிஸ் வங்கிகள் மீது ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் விளைவாக அவர்களின் பணத்தைத் திருப்பித் தர கிரெடிட் சுவிஸ் மற்றும் தேசிய வங்கி 1998ம் ஆண்டில் ஒரு மீட்பு நிதியை உருவாக்கியது. பணத்தைத் திருப்பித்தர வங்கிகள் இறந்து போன வங்கி வாடிக்கையாளர்களின் இறப்புச் சான்றிதழை வாரிசுதாரர்களிடம் கேட்டன. ஆனால் இது சாத்தியமில்லை என்பதால் கையில் இருக்கும் வேறு ஆதாரங்களின் அடிப்படையில் பணம் திருப்பி தரப்பட்டன. பெருந்துயர நிகழ்வில் ஜேர்மானியரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 452,000க்கும் அதிகமாகும் என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக