8/2/13

அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல்: இதுவரை 94 பேர் பலி


இந்தியாவில் கடந்த 5 வாரங்களில் பன்றிக்காய்ச்சல்(swine flu) தொற்று நோயினால் 94 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவில், பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 450க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நோய் பரவலுக்கான காரணம் தொடர்பில், சுகாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மோசமான குளிர்காலநிலையே பன்றிக் காய்ச்சல் தொற்று வேகமாக பரவிவருகின்றமைக்கு காரணம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான எச்1 என்1 வைரஸ் தொற்று முதன்முதலில் 2009-ம் ஆண்டில் மெக்சிக்கோவிலேயே கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகெங்கிலும் வேகமாக பரவியது. இந்தியாவில் கடந்த 2009-ம் ஆண்டில் 981 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார்கள். கடந்த 2010-ம் ஆண்டில் 1,763 பேரும் 2011-ம் ஆண்டில் 75 பேரும் கடந்த ஆண்டில் 405 பேரும் உயிரிழந்தார்கள். இந்த வைரஸினால் உலகெங்கிலும் சுமார் 2 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் 246 நோயாளிகள் இனங்காணப்பட்டனர், அவர்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 60-க்கும் அதிகமான நோயாளிகளில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. நோய் அறிகுறிகள் எச்1 என்1 வைரஸ் ஆரம்பத்தில் பன்றிகளிடத்திலிருந்தே உருவாகியதாக கண்டறியப்பட்டாலும் இப்போது அந்த நோய் முழுமையாக மனிதர்களைத் தாக்கும் நோயாக மாறியுள்ளது. பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக டெல்லியில் 5 தனியார் மருத்துவமனைகள் அடங்கலாக 22 மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எச்1 என்1 நோய்க் கிருமி ஆரம்பத்தில் பன்றிகளிடத்திலிருந்தே பரவியதாகக் கண்றியப்பட்டாலும், இப்போது முழுமையாக மனிதர்களைத் தாக்கும் நோயாகவே மாறிவிட்டது. தும்மல் மற்றும் இருமல் மூலம் மற்றவர்களுக்குத் தொற்றக்கூடிய இந்த நோயினை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்கமுடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வழமையான காய்ச்சலைப் போலவே, அதிகரித்த உடல் வெப்பம், இருமல், தொண்டை நோய், உடல் வலி, குளிர் நடுக்கம் போன்றவையே பன்றிக் காய்ச்சலுக்கும் நோய் அறிகுறிகள். சிலருக்கு தலைச்சுற்று, வாந்திபேதி போன்ற அறிகுறிகளும் காணப்படும். பொதுவாக கர்ப்பிணித் தாய்மாரும், குழந்தைகளும், இருதய நோய், ஆஸ்துமா, நீரிழிவு நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட முதியோரும் இந்த நோய் அறிகுறிகள் தொடர்பில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நோய் பரவல் குறித்து 'மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை' என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக