தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்ற இலங்கைத் தமிழர் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார்.
ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன்.
சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்கள். தொடர் மழை காரணமாக அங்கு பாறைகள் பாசி படர்ந்து இருந்தன.
இதனால் ஒரு பாறையில் ரீகன் ஏறியபோது அது வழுக்கி கால் தடுமாறி கீழே இருந்த தண்ணீரில் விழுந்தார் ரீகன். தண்ணீர் வேகமாக போய்க் கொண்டிருந்ததாலும், சுழல் இருந்ததாலும் அதில் சிக்கிக் கொண்ட ரீகனை உறவினர்களால் காப்பாற்ற முடியாமல் போனது.
தீயணைப்புத் துறைக்கும் தகவல் போனது. ஆனால் ரீகன் தண்ணீருக்குள் போய் விட்டார். தீயணைப்புப் படையினர் வந்து நீண்ட நேரம் தேடியும் ரீகனை கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ரீகனின் உயிரற்ற உடல் கிடைத்தது. ஈழத் தமிழர் ஒருவர் தேனிலவுக்காக வந்த இடத்தில் நீரில் விழுந்து பலியான தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர்
சங்கரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ரீகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக